wrote this some time earlier this month.
such a confession.
கதவை 'டபார்!' என்று அடைத்துவிட்டு என் மேனி மெத்தைமேல் மெதுவாக சாய்ந்தது. சோர்வு. சோர்வு என் உள்ளங்காலிலிருந்து என் உச்சி மண்டை வரையில் தலை விரித்தாடிக்கொண்டிருந்தது.
கண்ணுறக்கத்தை நாடிக்கொண்டிருந்த என் கண்ணிமைகள், என் தொலைபேசி மௌனத்தில் சினுங்கியதும், சட்டென்று விரிந்தது. என் கை தொலைபேசியை எடுக்க, கண்கள் அதை பார்க்க, அவன் முகம் என் தொலைபேசியில், இல்லை இல்லை, மனதில் தோன்றியது.
உடல் எவ்வளவு சோர்த்திருந்தாலும், மனம் சோர்வாக இல்லை போலும். அவன் குரல் கேட்க என் மனம் ஒரு குழப்பம் நிறைந்த மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் துள்ளிக் குதித்தது. அந்த ஒரு-தலை காதல் உரையாடல் ஒரு முடிவுக்கு வர, மீண்டும் நான் என் உலகத்திற்கு மீண்டு வந்தேன். 'இது காதல் இல்லை' என்று என் மனம் எனக்கு ஞாபகப்படுத்தியது. கனவுலகில் மிதந்தேன். உறங்கினேன்.
ஒரு கிண்ணத்தில் சாடின் துண்டுகளைப் போல ஒட்டிக்கொண்டு இரயிலில் பயணிப்பதை ஆங்கிலத்தில் வர்ணிப்பர் இல்லையா? அன்று காலையில் இரயில் பயணம் அப்படி இல்லை. வெறித்தோடி இருந்த்து சாலை. உலகத்தில் நான் மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும் என்ற நெடுநாள் கனவு அன்று கடுகளவு நனவானது. நான் அமர்ந்த இருக்கையில் அன்று ஏதோ ஒரு தனி சுகம். காதிலே இன்னிசையின் தேன் பாய்ச்சல். கைகளில் கணக்கு புத்தகம். ஜனவரி திங்களின் பத்தாம் தேதி. ஊதியம் வரும் நாள். வரும் பணத்தைக் கொண்டு எல்லா செலவுகளையும் கழித்துவிட்டு மீதமுள்ள பணத்தை வைத்து அவருக்கு ஒரு...
திடீரென்று தனிமையின் சுகம் மறைந்து, தனிமை என்னை வாட்டியது. அவருக்கு... அவர்... இல்லை...
இறந்தகாலத்திலேயே என் மனம் சிக்கிக்கொண்டிருக்கிறது. கண்களில் கண்ணீர் மல்க, என் மனதை இறுக்கிக்கொண்டு கண்களில் நிரம்பிய உப்புநீரை திரும்பவும் கண்களுக்குள்ளேயே விரட்டினேன்.இரயில் கதவுகள் திறந்தன. என் கால்கள் விறுவிறுவென பாதையில் தாளம் போட்டன. காலையில் வேலையை நோக்கி செல்வதைப்பற்றி அன்று துயர் இல்லை. இறந்தகாலத்தைவிட்டு எதிர்காலத்தை அடைவேனோ என்ற கேள்வி எழ வேதனை மனதில் நிலவியது.
காலையிலேயே ஒரு பாடலைக் கேட்டால் அதே பாடல் நாள் முழுக்க மனதிலே ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும். அன்று அவருடைய முகம் என் நெஞ்சில் நின்ற ராகம். என் அவர். பழைய அவர். அவரைப்பற்றி நினைத்தால் என் மனதில் சொட்டும் சில நியாபக துளிகள்.
தேநீரில் கொஞ்சமாக பால். காதில் ஆங்கிலப் பாடல். முகத்தில் கடுகடுவென கோபம். பரந்த உதடுகளில் கலகலவென சிரிப்பு . அவரைச் சுற்றியிருப்பவர்களின் முகங்களில் புன்னகை - என் முகத்தில் தவிர. என் காதலின் உண்மை நிலை... கண்ணத்தில் 'பலார்' என ஒரு அரை விழுந்தாற்போல...
மௌனத்தில் சினுங்கியது தொல்லைபேசி. புதிய அவன், மறுமுனையில், ஆனந்தமாக.
அவன்:ஏய் குட்டி, காலையிலிருந்து என் நியாபகமே இல்லையா? உன்ன ரொம்ப மிஸ் பன்னுறேன்.
இவள்: இல்லை, வந்ததிலிருந்து ஒரே வேலையா இருந்தேன், அதான்...
அவன்: ஹஹஹ. சும்மாதான் கேட்டேன் குட்டி. இன்னிக்கு அம்மா உன்னப்பத்தி கேட்டாங்க. உன்ன பார்க்கனும்னு சொன்னாங்க.
இவள்: நாம வெறும் ஃபெரன்ஸ்னு அம்மாகிட்ட சொல்லிட்டீஙகன்னு நெனச்ச?
அவன்: சொன்னேன்! அவங்கதான் அப்படி சொன்னாங்க!
இவள் மௌனம் சாதிக்க.
அவன்: சரி குட்டி. உன்ன மூட் out பன்ன விரும்பல. ஒன்னும் நினைக்காதே! நீ உன் பழைய வாழ்க்கைய மறக்கிற வரைக்கும் நாம ஃபெரன்ஸ் தான். சரி. அப்புறம் கால் பண்ணுறேன். பாய் குட்டி!"
பெருமூச்சு விடக்கூடா நெஞ்சில் தெம்பில்லாதவாறு, என் மனதை என் வேலைப்பளுவில் புதைத்தேன். தப்பிக்க எனக்கு தெரிந்த ஒரே வழி. இந்த நிம்மதி மாலை ஐந்து மணி வரையில் மட்டுமே.
பழைய அவரை சந்தித்தேன். பொழுது சாயும் வேலையில்.
காலை அரும்பி பகலெல்லாம் போதாகி, மாலை மலரும் இவர் நோய்.
அடுத்த இரண்டு மணி நேரம் பழைய வாழ்க்கையை மீண்டும் அனுபவிக்க காத்திருந்தன என் மனம், என் உள்ளம், என் உடல், என் ஆசைகள்.
கண்ணத்தில் அவர் முத்தமிட, பழைய சுகத்தில் மூழ்கினேன் மெல்ல. உலகத்தை உலுக்கிய செய்திகளைப்பற்றி ஆர்வமாக பேசினோம் நாம் இருவரும். உள்ளங்களை இறுக்கிக்கொண்டிருந்த விக்ஷயங்களைப்பற்றி கதைக்க இரு மனமும் இணங்கவில்லை. அந்த நொடியில் புன்னகையிட்டுக்கொண்டே எதேர்சையாக "போங்க!" என்று நான் சொல்ல, திடீரென அவர், "அதான் போய்ட்டேனே" என்று சட்டென்று சொல்லிவிட்டார்.
அவர்: யாராவது இருக்காங்கலா?
(பாசாங்கு)
அவருடைய அவள்: யாராவது என்றால்?
அவர்: ஆர் யூ டேட்டிங் அனிவான்?
(பொய்)அவருடைய அவள்: சே, இல்ல. நீங்க?
அவர்: நானும் இல்லை.இனிமேலும் இருக்காதுன்னு நினைக்கிறேன்
(துள்ளல்)அவருடைய அவள்: வேறு வழியில்லைன்னா அப்புறம் நீங்க என்னத்தான் கல்யாணம் பன்னனும்.
அவர்: ஹஹஹ நீயும் தான். கல்யாணம் பண்ண தேவையில்லையே. நீயும் நானும், ஒரே வீடு... நமக்காக...
தலைக்குனிந்த என் முகம் அன்னார்ந்து அவர் முகம் பார்த்த்து. இது போன்ற பல திருமண கனவுகள் அந்த பழைய வாழ்க்கையில் நொடிக்கு நொடி எங்கள் உரையாடலில் தலைத்தூக்கின. அப்போது கேட்கும்போது சஞ்சாரம். இப்பொழுது கேட்கும்போதெல்லாம் மனதில் சஞ்சலம்.
கட்டியணைத்து, 'பார்த்துக்கொள்!' என்று அவர் சொல்லிவிட்டதும் இருவரும் விடைப்பெற்றோம்.
வீட்டை நோக்கிய பயணம் ஒரு வெள்ளைத்தாள்.
இல்லத்தை அடைந்துவிட்டதும், கை கால்களை அழம்பிவிட்டு, என் தனியறையில் தஞ்சமடைய விரைந்தேன்.
சுபமில்லை.